Saturday, April 16, 2011

அரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை

samuthaayam
தமிழகத்தின் அரசியல் சூடு பிடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யார் எப்பொழுது என்ன முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரியாமல் ஒரு புறம் அரசியல் கட்சிகளும் மறுபுறம் அவர்களது ஆதரவாளர்களும் எப்ரல் 13-ஐ நோக்கி அசுர வேகத்தில் பயணிக்கின்றனர். இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒன்றும் விதிவிலக்கல்ல. இதனை பார்க்கும் பொழுது  அனைத்து தரப்பிலும் ஒரு அரசியல் சுனாமி அடித்திவிட்டு செல்லும் என்றே தோன்றுகிறது. இதில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தனது நிலைப்பாட்டையும் அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடுகளையும் பல்வேறு பிரச்சனைக்ளுக்கு மத்தியில் ஒருவழியாக அறிவித்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டவர்களாக  அரசியல் பிரச்சார களத்தை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த நிலையில் என்றும் இல்லாத அளவிற்கு முஸ்லிம் கட்சிகளும் தங்கள் பிரதிநிதித்துவத்தை வெளிக்கொணரும் விதமாக தமிழகத்தில் 14-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட தயாராகி வருகின்றனர். இதில் பேசப்படும் பெரிய கட்சிகளாக முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா (SDPI) ஆகியவை மக்களிடத்தில் தங்களை நிலை நிறுத்தி இருக்கின்றன.
இதில் முஸ்லீம் லீக் ஆளும் கட்சியான திமுகவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், மமக எதிர்கட்சியான அதிமுகவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், தேசிய அரசியல் கட்சியான SDPI இவ்விரு அணிகளையும் சாராமல் தன்னிச்சையாக எட்டு தொகுதிகளிலும் களம் காணும் என்று அக்கட்சிகளின் தலைமை முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதே சூழலில் இன்னும் சில முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கருத்துகளையும் அறிவித்திருக்கின்றன. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  அரசியலில்  நாம் போட்டியிடுவதில்லை ஆனால் கல்வி வேலைவாய்ப்பு, பொருளாதரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் முன்னேற ஆவண செய்யும் கட்சிகளுக்கு ஆதரவு என்றும், மமக எங்கு போட்டியிடுமோ அங்கு அவர்களை தோற்கடிப்பதற்காக வேலைகளை செய்வோம் என்றும் அறிவித்திருக்கிறது.
இதே போன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் அதிமுக-விற்கு தங்கள் ஆதரவு எனவும் முஸ்லிம் வேட்பாளர்கள் எங்கு போட்டியிடுவார்களோ அங்கு அவர்களூக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என அறிவித்திருக்கிறது. இதே போன்று அகில இந்திய இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் தம் நிலைப்பாடு SDPI போட்டியிடும் அனைத்து இடங்களிலும் SDPI செயல்வீரர்களூடன் இணைந்து தங்கள் செயல்வீரர்களும் களப்பணி ஆற்றுவார்கள் என்று SDPI க்கான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த நிலைப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சிலர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இல்லாமல் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒற்றுமையோடு ஒரே கட்சியாக போட்டியிட்டால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் பரவலாக பேச்சு நடைபெறுகிறது.
இனிமேல் அவ்வாறு பேசிக் கொண்டு இருப்பதில் பயனில்லை காரணம் இம்மூன்று கட்சிகளும் முடிவுகள் எடுத்துவிட்டது. இனி இதில் மாற்றங்கள் விளைய வாய்ப்புகள் இல்லை. நம் ஒற்றுமையை பற்றி இந்த தேர்தலை விட்டு விட்டு அடுத்த தேர்தல் வருவதற்கு முன் பேசி சுமூக தீர்வுகாண விளைவதுதான்  புத்திசாலித்தனமாக இருக்கும்.
நமக்கு இருக்கும் சிறிய கால அளவை வீணடிப்பதை விட்டு விட்டு இந்த மூன்று கட்சிகளில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி ஆராய்வோம்.
முஸ்லீம் லீக் – பல வருடங்களாக அரசியலில் கூட்டணி வைத்து போட்டியிட்டு வருகின்றது வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் ஏதேனும் நலத்திட்டங்களோ அல்லது சமூக மாற்றத்திற்கான முயற்சிகளோ இதன் மூலம் ஏற்பட்டிருக்கின்றதா என்றால் அநேக மக்களின் கருத்து இல்லை என்பதாகும். நிதர்சனமும் இதுதான்.
சட்டசபைக்கும், பாராளுமன்றத்திற்கும் செல்லும் நம் தலைவர்கள் நம்மை பற்றி பேசுவது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான். இதனால் மக்களுக்கு இவர்கள் மேல் இருந்த நம்பிக்கை மறைந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு காலம் அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நாம் இவர்களை தேர்ந்தெடுத்தோம் ஆனால் முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் இவர்களால் நமக்கு கிடப்பதற்கு வாய்ப்புகளே இல்லை என்னும் அளவிற்கு போய்விட்டது. இதற்கு காரணம் சமூகத்தை பற்றி சிந்திக்காமல் சீட்டில் மட்டும் குறிவைத்து அதற்காக கூலை கும்பிடு போட்டுக்கொண்டு திரிகிறார்கள்.
எந்த அளவிற்கு என்றால் சமீப காலத்திற்கு முன்னால் தோன்றிய சிறிய அரசியல் கட்சிகள் கூட தனகென்று தனி சின்னத்தை போராடி பெற்று அதில் போட்டியிட்டு வெற்றியோ தோல்வியோ தன் பலத்தை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டது என்று சொல்லும் இவர்களோ காலம் முழுவதும் ஒரே சின்னத்தில்(வேறு கட்சியின்) நின்று இரண்டு சீட்டிற்கும் மூன்று சீட்டிற்கும் காலில் விழாத குறையாக சமூகத்தின் தைரியத்தையும், பலத்தையும் சிதைத்துவிட்டனர். அதில் வெற்றி பெற்று சட்டசபை சென்றால் அங்கு குரல் கொடுக்க சொன்னால் கொரடாவில் இல்லாததை பேசக்கூடாது என்று விளக்கம் வேறு. இவ்வாறு இருக்கும் இவர்களால் இந்த முஸ்லீம் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை என்று எண்ண தோன்றுகிறது.
ஆனால் இது ஒரு பழம் பெறும் கட்சி இது காயிதே மில்லத் சாஹிப் போன்ற சமூகத்திற்காக உழைத்த தன்னலமற்ற தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.  தமிழக அரசியலின் கடந்த கால வரலாறுகளை புரட்டினால் ஆட்சியில் யார் அமர வேண்டும் எனும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பலம் பொருந்திய கட்சியாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்த கட்சியின் இன்றைய நிலையை சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
அதன் பிறகு உருவாகியுள்ள இரண்டு கட்சிகள். இதில் யாரை தேர்ந்தெடுப்பது மனித நேய மக்கள் கட்சியா அல்லது SDPI யா இதுவே இன்று நம் முன் இருக்கும் மிகப்பெரும் கேள்வி. இதில் சற்று தொலைநோக்கு பார்வையுடனும், நடுநிலையோடும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். காரணம் இரண்டும் சமூகத்திற்காக கடினமாக உழைக்கும் கட்சிகள் இவர்கள் சட்டசபைக்கு சென்றால் நிச்சயம் நம் சமூகத்தின் நன்மைக்காக உறுதிகுலையாமல் உழைப்பார்கள். ஆனால் இதில் யாரை முதலாவதாக தேர்ந்தெடுப்பது. அவர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது  என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் களத்தை சந்தித்து அதில் தோல்வி அடைந்திருந்தாலும் அந்த தோல்வி அரசியல் அறிவை பெற மமக-விற்கு துணை புரிந்திருக்கிறது. அந்த அனுபவத்தோடு  இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிடயிருக்கிறது.
இந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் கேட்கும் கோரிக்கைகளை தரும் கட்சியுடன் கூட்டனி அல்லது எங்கள் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் அரசியல் கட்சிக்கு எங்களுடைய சமூகத்தின் முழு ஆதரவு என்று ஏதேனும் கோரிக்கை (Demand) வைத்ததாக நமக்கு தெரியவில்லை. இது சீட்டு தந்தால் போதும் என்று அதிமுக-வின் பின்னால் போய்விட்டார்களே என்று எண்ண தோன்றுகிறது. இருப்பினும் மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக்கு பாடுபடுவது என்று அறிவித்திருக்கிறது. அதாவது திமுக வை தோற்கடிக்க அரசியல் களம் காண இருக்கிறது மமக.
எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் சீட்டை மட்டும் எதிர்பார்த்து ஏழு மாதங்களுக்கு முன்பே அதிமுக-வுடன் கூட்டனி பேச்சுவார்த்தை தொடங்கியது நம் சமூகத்தில் இவர்களுக்கு இருந்த நற்பெயரை சீர்குலைக்கும் விதமாக அமைந்துவிட்டது.
அதனோடு சேர்த்து விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும்; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது அதை கட்டுபடுத்த வேண்டும் என்ற ஓரிரு கோரிக்கைகளை முன்வைத்தது சமூகம் அதிகாரத்தை அடைவதற்கு போதாது, பொருந்தாது என்றே நினைக்க தோன்றுகிறது. ஆனால் இந்த கோரிக்கைகள் சற்று மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றே குறிப்பிடமுடியும்.
இது போன்ற அறிக்கைகளை வைத்து பார்க்கும் போது இவர்களுடைய தலைவர்கள் நம் சமூகத்தில் உள்ள மக்களிடம் கலந்துரையாடாமல் தன் சுய கருத்தை சமூக கருத்தாக அறிவித்தார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆனால் இப்பொழுது இவர்கள் தொடங்கியிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் வாசகங்கள் நம்மை தடுமாற வைக்கிறது. காரணம் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரங்களில் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் அங்கம் பெற, கிடைத்த இட ஒதுக்கீட்டை முழுமைப் படுத்த, இது போன்ற சமுதாய கோரிக்கைகளை சட்டம் இயற்றும் அவைகளுக்குள் சொந்த அடையாளத்தோடு எடுத்துவைக்க நமக்கு அதிகாரம் தேவை அதற்காக நாம் பலவழிகளை கையாளுவோம் அதில் ஒன்றுதான் இந்த கூட்டணி. சீட்டு பெறுவதற்கு முன்னால் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருந்த இவர்கள். சீட்டை பெற்ற பிறகு அதீத கவனமும், அதிகார வர்க்கத்தில் நாம் அமர்வதற்காக இவர்கள் நடத்திய நாடகமாக இருக்குமோ என்றும் கூறத் தோன்றுகிறது. இதை தான் அரசியல் வித்தை என்பார்களோ என்று கூறுமளவிற்கு சிந்தனையில் ஆழ்த்துகிறது.  அந்த அதிகாரம் பெற  என்ற இவர்களது தேர்தல் பிரச்சாரங்களை பார்க்கும் போது புலி பதுங்கியது பாய்வதற்கு தான் என்று எண்ணம் எழாமலில்லை. ஆனால் சீட்டை பெறுவதற்கு முன்னமே மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யாதது தவறு என்பது மட்டும் உண்மை. அதை நிவர்த்தி செய்யும் விதமாக தான்  இப்பொழுதாவது சமுதாய தலைவர்களை சந்தித்து கொண்டிருப்பது வரவேற்கதக்க விஷயம்.
SDPI -இது ஒரு தேசிய அரசியல் கட்சியாக பரிணமித்திருக்கிறது. இக்கட்சி தேசிய அளவில் தேர்தல் களம் கண்டு ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களில் வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் தமிழக அரசியலை பொறுத்தவரை புதிய அரசியல் கட்சிதான். இவர்கள் திருச்சி வார்டு எலக்சனில் சமீபத்தில் போட்டியிட்டார்கள் அது ஒன்றும் மிகப்பெறும் அரசியல் அனுபவத்தை கொடுக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்கள் வைக்கும் கோரிக்கைகளும், இவர்கள் விடும் அறிக்கைகளும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை மிஞ்சும் அளவிற்கு இருப்பது விந்தையானதே.
தேர்தல் களத்தை சந்திப்பதற்கு முன்னால் இவர்கள் தமிழகத்தின் இரண்டு பெரும் கட்சிகளுக்கு வைத்த கோரிக்கை நாங்கள் உங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் சதவிகித அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு இந்த சட்டசபை தேர்தலில் வழங்கப்பட  வேண்டும் அதாவது தமிழகத்தின் 234 தொகுதிகளில் 23-24 தொகுதிகளை முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்கபட  வேண்டும்  அவ்வாறு அளிக்கும் கட்சிக்கு  ஆதரவாகவும், அக்கட்சியின் வெற்றிக்காகவும் SDPI போராடும் என்ற அறிவிப்பு செய்தார்கள்.
இது சமூக மக்களிடத்திலும் சரி அரசியல் வட்டாரங்களிலும் சரி புதுவிதமான யாரும் யோசித்திராத விதத்தில் அதே நேரத்தில் தனது கட்சியை பற்றி சிறிதும் கவலைப்படாமல் அறிவித்த அறிக்கையாகவே தெரிந்தது. காரணம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடத்தில் இந்த அளவு தைரியமாக அரசியல் கட்சிகளுக்கு Demand வைத்தது யாரும் இல்லை என்பதால். அதை தொடர்ந்து வக்பு சொத்துகளை முறைபடுத்துவது, சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிகளை விடுதலை செய்ய ஆவண செய்வது, பாபர் மசூதி இடிப்பு, மீனவர்கள் பிரச்சனை, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றத்தை கொண்டுவருதல் என அடுக்கடுக்காக இவர்கள் வைத்த கோரிக்கைகள், இவர்கள் அரசியலில் ஆபத்தானவர்கள் என்று அரசியல்வாதிகளை மிரள வைத்தது.
அத்தோடு தங்களது ஒவ்வொரு கூட்டங்களிலும் ஒடுக்கபட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் அரவணைப்பது இவர்களது கூடுதல் பலம்.
அதன் தொடர்சியாக இவர்களிடத்திலும் சீட்டு பேறம் நடைபெற்றதாக தகவல். ஆனால் அதை உதறி தள்ளிவிட்டு தனித்து போட்டியிடுவோம் என அறிவித்தது இவர்களது தன்னிம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் காட்டுகிறது. இவை அனைத்தையும் வைத்து பார்த்தால் இது தனி மனித மூளையால் சிந்த்திக்க முடியாது இந்த கட்சிக்கு பின்னனியாக பலமிக்க போராட்ட குணம் கொண்ட தன்னையும் தன் கட்சியையும் பற்றி கவலை கொள்ளாத, சமூகத்தின் வலிமையை தன் வலிமையாக கொண்டு சிந்திக்கும் நல்ல தலைமை இருக்குமோ என்று பாமரனையும் யோசிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த போரட்ட குணம் இறுதிவரையில் இருந்தால் நல்லது.
கட்சிகளின் நிலைமைகள் இவ்வாறிருக்க போட்டியிடும் தொகுதிகளின்  அடிப்படையில் இம்மூன்று கட்சிகளும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்கும் நிலைமை எற்பட்டுள்ளது. இதில் மனிதநேய மக்கள் கட்சியும் எஸ்.டி.பி.ஐயும் இராமநாதபுரம் தொகுதியிலும், துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயும், இ.யூ.முஸ்லிம் லீக்கும் நேருக்கு நேர் அரசியல் களத்தில் சந்திக்கின்றன. இவர்கள் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். இந்த இடம் அல்லாமல் SDPI போட்டியிடும் போட்டியிடும் கடையநல்லூர், பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்),  பூம்புகார்(நாகை மாவட்டம்), தொண்டமுத்தூர்(கோவை மாவட்டம்), திருப்பூர் தெற்கு, நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம்) ஆகிய நான்கு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் அனைவரும்  SDPI-யை ஆதரிக்க வேண்டும். அதே போன்று மமக போட்டியிடும்  சேப்பாக்கம்(திருவல்லிக்கேணி), ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் நாம் அனைவரும் மமக-வை ஆதரிக்க வேண்டும். முஸ்லீம் லீக் போட்டியிடும் வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் முஸ்லீம் லீக்கை ஆதரிக்க வேண்டும். இதில் அந்தந்த அரசியல் கட்சிகளுக்கூட கருத்து வேறுபாடு இருக்காது என்று கூட கூற முடியும்.
இதில் குழப்பம் மிகுந்த இராமநாதபுரம் மற்றும் துறைமுகம் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளின் கொள்கை, அவர்களது கோரிக்கைகள், சமுதாயத்திற்கு பாடுபடும் மனநிலை, அரசியல் கட்சிகளிடம் இவர்கள் செய்த Demand ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். இதனை அந்த தொகுதிகளை சேர்ந்த மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இதில் குழப்பம் நிறைந்த தொகுதிகளில் அக்கட்சிகளின் கடின உழைப்பு தீர்மானிக்கும் அது போக மீதமுள்ள தொகுதிகளை நாம் குறிப்பிட்டபடி  தேர்தல் களம் கண்டால் இன்ஷா அல்லஹ் நம்மிடமிருந்து 4+2+2 = 8 சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆதலால் ஒற்றுமையில்லை என்ற மனநிலையை அகற்றிவிட்டு முன்னால் இருந்ததைவிட இயக்கங்களின் வருகையினாலும், கட்சிகளின் தோற்றங்களாலும் முஸ்லிம் சமூகத்திற்கு பலன்கள் தானே தவிர இழப்புகள் இல்லை என்பதே நிதர்சனம். இந்த அடிப்படையில் நாம் பயனித்தால் நிச்சயம் அடுத்த தேர்தலில் நாம் நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் அரசியல் களம் காண்பது சாத்தியமாகும். சிந்திப்போம்…….
புதுவலசை பைசல்

அன்னா ஹஸாரேவின் தரிசனத்திற்கு 600 ரூபாய்

annadarshan295
புதுடெல்லி:ஊழலுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அன்னா ஹஸாரேவின் தரிசனத்திற்காக 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
மக்கள் லோக்பால் மசோதாவிற்காக ஹஸாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சுவாமிஜீகளின் மட்டத்திற்கு ஹஸாரேவின் புகழும் உயர்ந்துள்ளது.
புனேயிலிருந்து 70 கி.மீ தொலைவிலுள்ள ரலேகான் சித்தி என்ற ஹஸாரேவின் முன்மாதிரி கிராமத்தில் வசிக்கும் அவரை சந்திக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனைத் தொடர்ந்து ஹஸாரேவின் தரிசனத்தை வியாபாரமாக மாற்ற திட்டமிட்ட சுற்றுலா நிறுவனம் ஒன்று ரலேகான் சித்தியில் ஹஸாரேவை தரிசிக்க ரூ.600 கட்டணமாக நிர்ணயித்துள்ளது.
ஐ.டி. ப்ரொஃபசனல்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் ஆகியோர் ஹஸாரேவை தரிசிப்பவர்களில் அடங்குவர். ஹஸாரேவால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சரத்பவாரின் தொகுதியான பாராமதியிலிருந்து பயணம் துவங்குகிறது. அக்ரோ டூரிஸம் டெவலப்மெண்ட் இயக்குநர் பாண்டுரங்க் தவாரே 60 சுற்றுலா பயணிகளின் குழுவுடன் ரலேகானுக்கு வந்தார். டூர் பேக்கேஜ் குறித்து அறிய நூற்றுக்கணக்கானோர் தினமும் அழைப்பதாக தவாரே கூறுகிறார்.
ரலேகான் சித்தி கிராமம் அன்னா ஹஸாரே ஜுரம் பாதித்தவர்களால் உற்சாகத்தில் மூழ்கியுள்ளதாக ஹஸாரேவின் அந்தரங்க செயலாளர் சுரேஷ் பதாரே தெரிவிக்கிறார். ஆயிரக்கணக்கானோர் இக்கிராமத்திற்கு வருவதாக பதாரே கூறுகிறார்.ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் வேளையில் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய யோகா கலைஞர் எனக் கூறப்படும் பாபா ராம்தேவ் ஆவார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்றவர்களும் ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இறுதியில் ஹஸாரே சுவாமிஜீகளுக்கு கிடைத்த செல்வாக்கின் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

குழந்தைகளைக் குறி வைக்கும் விளம்பரங்கள்!



kids_drinks
வாப்பா…! ஹார்லிக்ஸ் வாங்காம வந்துடாதே…”
சாமான்கள் வாங்குவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த தந்தையை நோக்கி 6 வயது மகன் கூறியது இது.

ஹார்லிக்ஸ் விலையை யோசித்தபோது மனம் தயங்கினாலும், தந்தைக்கு உள்ளூர ஒரு பூரிப்பு. சாக்லேட் தவிர வேறெதையும் இதுவரை கேட்டிராத பிள்ளை, இன்று சத்தான ஆகாரமான ஹார்லிக்ஸ் வாங்கிக் கேட்கிறானே…
“ஹார்லிக்ஸ் வாங்கித் தரேன். பாலில் கலந்து தந்தால் சமத்தா குடிக்கணும் என்ன…” – இது தந்தை.

உடனே மகன் சொன்னான்: “பாலில் கலக்கி நீயும், உம்மாவும் குடிச்சுக்கங்க. எனக்கு அந்த டிஜிட்ரோனிக்ஸ் வாட்ச் போதும்.”
“டிஜிட்ரோனிக்ஸ் வாட்சா…?”
“ஆமா. டி.வி.யில விளம்பரம் பார்க்கலையா? அந்த வாட்ச் என்னா அழகா இருக்கு…! கையில கட்டுனா சூப்பரா இருக்கும்.” – மகன் சொல்லி விட்டு துள்ளிக் குதித்தான். வாப்பா வாயடைத்துப் போனார்.

மிட்டாய் வாங்கித் தரவேண்டும், பிஸ்கட் வாங்கித் தர வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது குழந்தைகளுக்குப் புதிதல்ல. ஆனால் அந்தக் காலமெல்லாம் மலையேறி வருகிறது. இன்று வெறுமனே ஒரு சாக்லேட்டையோ, பிஸ்கட்டையோ வாங்கிக் கொடுத்து குழந்தைகளைத் திருப்திப்படுத்திட முடியாது. அவர்களுக்கு இஷ்டப்பட்ட கம்பெனி, இஷ்டப்பட்ட பிராண்ட் தின்பண்டங்கள்தான் வாங்கிக் கொடுக்கவேண்டும்.
இதற்குக் காரணம் இன்று பரவலாகியிருக்கும் விளம்பரங்கள். குறிப்பாக குழந்தைகளைக் குறி வைக்கும் டி.வி. விளம்பரங்கள். அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் குழந்தைகளின் மனங்களில் ஆழப் பதிந்து விடுகின்றன.
“எனக்கு நெஸ்லே சாக்லேட்டுதான் ரொம்பப் பிடிக்கும். விளம்பரத்தில் வர்ற நாய்க்குட்டி உடம்புல நட்சத்திரம் மின்னுறது எவ்வளவு அழகா இருக்கு…?” என்று இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை சொல்கிறது. அக்குழந்தை நெஸ்லே சாக்லேட் இல்லாமல் பள்ளிக்கூடமே போவதில்லை.
சாக்லேட்டும், பிஸ்கட்டும் போய் இன்று ஆடைகள் விஷயத்திலும் குழந்தைகளை ஆட்டிப் படைக்கிறது விளம்பரங்கள்.
விளம்பரங்களில் வரும் வாசகங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் அப்படியே பதிந்து விடுகின்றன.
“Boost is the secret of my energy” என்று சச்சின் டெண்டுல்கர் விளம்பரத்தில் சொன்னாலும் சொன்னார். இங்கே நமது வீடுகளில் எல்.கே.ஜி. குழந்தைகள் கையில் டம்ளரைப் பிடித்துக்கொண்டு, புஷ்டியைக் காட்டிக்கொண்டு அப்படியே சச்சின் மாதிரி சொல்கின்றன.
இப்போதுள்ள முக்கிய வியாபாரத் தந்திரமே இதுதான். குழந்தைகளுக்குப் பிடிக்கும் பொருட்களை “இலவசம்” என்று இணைத்துக் கொடுப்பது. அப்போதுதான் குழந்தைகள் பெற்றோர்களை நச்சரித்து அந்தச் சாமான்களை வாங்கச் சொல்வார்கள்.
சில பொருட்கள் வாங்கினால் ‘டாடூஸ்” (Tatoos) என்ற கையிலும், உடம்பிலும் ஒட்டும் பொருட்களை இலவசமாகக் கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும் கார்ட்டூன் கதாபாத்திரங்களும், மிருகங்களும், குத்துச்சண்டை வீரர்களின் படங்களும் இன்று டாடூஸாகக் கிடைக்கின்றன. நமக்கே தெரியாத, வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் குழந்தைகள் சரளமாகச் சொல்கின்றன.
கிஸான்(Kissan) ஜாம் வாங்கினால் “போக்கிமான்” கார்டு இலவசம்.

லேய்ஸ் (Lays) வாங்கினால் சேகரித்து வைக்குமாறு தூண்டுகிற டாடூஸ் இலவசம்.

இவைகளெல்லாம் குழந்தைகளிடத்தில் மிகப் பிரபலம்.
“நீ பெரியவனானால் என்ன வண்டி வாங்குவாய்?” என்று ஒரு குழந்தையிடம் கேட்க, “டி.வி.எஸ். விக்டர் வாங்குவேன்” என்று சட்டென்று பதில் வருகின்றது.
ஏன் என்று கேட்க வாயைத் திறக்கும் முன்பே அடுத்த பதில் வருகிறது: “அது டெண்டுல்கர் வண்டி. அவர்தான் எனக்குப் பிடித்த ஸ்டார்!”

பெற்றோர்கள் ஷாப்பிங் செல்லும்பொழுது பிள்ளைகளும் கூடச் செல்கின்றன. பெற்றோர்கள் தங்கள் ‘பட்ஜெட்டு’க்கேற்ப பொருட்களை விலையைப் பார்த்துப் பார்த்து வாங்குவதில் மும்முரமாக இருப்பார்கள். பிள்ளைகளின் கண்களோ ஆவலாய் அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டிருக்கும். டி.வி.யில் பார்க்கும் விளம்பரப் பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கும்.
இதனால் சில சூப்பர் மார்க்கெட்டுகளில் ‘கிட்ஸ் ட்ராலி’ என்று குழந்தைகளுக்குத் தனியாக ட்ராலி வைத்திருக்கிறார்கள்.
ஷாப்பிங் மட்டுமல்ல. விடுமுறை தினங்களில் எங்கே ‘பிக்னிக்’ எனும் சுற்றுலா செல்லவேண்டும் என்று இப்பொழுதெல்லாம் தீர்மானிப்பது குழந்தைகள்தான்.
கிஷ்கிந்தாவோ, எம்.ஜி.எம்.மோ, அதிசயமோ, பிளாக் தண்டரோ… எல்லாம் குழந்தைகள் கையில்!
அத்தோடு இன்று டி.வி. விளம்பரங்களில் குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்கள்.
குழந்தைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத சோப்புகள், மருந்துகள், ஏன், வங்கிகள், செல்போன்கள் விளம்பரங்களிலும் குழந்தைகள்தான் முக்கிய கதாபாத்திரங்கள்.
பால் வடியும் குழந்தைகளின் முகங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அத்தோடு குழந்தைகளும் அந்த விளம்பரங்களை விரும்பிப் பார்க்கின்றன. ஆதலால் விளம்பரத்தில் இப்படியொரு தந்திரத்தைக் கையாளுகின்றனர்.
ஒரு குழந்தை ஒரு விளம்பரத்தை விரும்பிப் பார்க்கிறது என்றால் அதற்கு அடுத்த கட்டம் என்பது அந்தப் பொருள் தன் வீட்டில் இருக்க வேண்டும் என்று அது விரும்புவததான். உடனே பெற்றோர்களை அது நச்சரிக்க ஆரம்பித்து விடுகிறது.
இப்படி அந்தப் பொருளின் விற்பனை அதிகரிக்கின்றது. இதற்காகத்தான் விளம்பரங்கள் அனைத்தும் குழந்தைகளைக் குறி வைத்து வெளிவருகின்றன.
MSAH

காந்தியை இழிவுப்படுத்தியது யார்?

gandi savarkar
அமெரிக்க எழுத்தாளர்,ஜோசப் லெலிவெல்ட் எழுதிய, “கிரேட் ஸோல், மகாத்மா காந்தி அண்ட் ஹிஸ் ஸ்ட்ரக்ல் வித் இண்டியா” (Great Soul- Mahatma Gandhi and His Struggle with India) என்ற புதிய வாழ்க்கை சரிதப் புத்தகம், இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் தேசத் தந்தை என்று கருதப்படும் காந்தியை ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் இனவெறியர் என்று காட்டும் வகையில் சில கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக,சில பத்திரிகைகளில் வெளிவந்த மதிப்புரைகள் இந்த சர்ச்சையைத் தூண்டியிருக்கின்றன.
காந்திக்கும்,ஜெர்மானிய கட்டிடக் கலைஞரும், உடற்பயிற்சி செய்வதில் விருப்பம் உள்ளவருமான ஒருவருக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவை இந்த புத்தகத்தின் சில பகுதிகள் கோடிட்டுக் காட்டியிருந்தன. குஜராத் அரசு இப்புத்தகத்தை தடைச் செய்துள்ளது. மத்திய சட்ட அமைச்சர் இப்புத்தகத்தை தடைச்செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.
பின்னர் இப்புத்தகத்தை எழுதிய நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், புலிட்சர் விருது பெற்றவருமான, ஜோசப் லெலிவெல்ட், காந்தியை, இருபால் உறவுக்காரர் என்றோ அல்லது இனவெறியர் என்றோ தான் எந்த இடத்திலும் வர்ணிக்கவில்லை எனத் தெரிவித்ததால் புத்தகத்தை தடைச்செய்ய போவதில்லை என கூறியுள்ளார்.
ஆனால்,புத்தகத்திற்கு தடை விதித்தாலும் கூட இணையதளங்கள் வாயிலாகவும் இன்னும் பிற வழிகளிலும் பல மக்களையும் அது சென்றடையத்தான் செய்யும். இத்தகைய விவாதங்கள் அமெரிக்க யூதரான ஜோசப் லெலிவெல்ட் எழுதிய புத்தகத்திற்கு விளம்பரத்தையே தேடிக் கொடுக்கும் என்பதை தவிர வேறு எதுவும் சம்பவிக்கப் போவதில்லை.
குஜராத் மாநிலத்தை ஆளும் மோடி ஹிந்துத்த்வா பாசிச பரிவார பாசறையில் பயிற்சி பெற்றவர். ஹிந்துத்துவா பாசிஸ்டுகள்தாம் காந்தியை திட்டம் தீட்டி படுகொலைச் செய்தனர். அத்தோடு காந்தியின் அகிம்சைக் கொள்கைக்கு எதிராக நாடுமுழுவதும் கலவரங்கள், இனப் படுகொலைகள், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி இந்தியாவை இம்சைப்படுத்தி வருபவர்கள்தாம் இந்த கயவர்கள் கூட்டம்.
இந்நிலையில் தேசபிதாவின் மீது ஏதோ பற்றுடையவர்போல் கபட நாடகமாடும் மோடியின் அரசியல் சந்தர்ப்பவாதம்தான் காந்தி பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகத்திற்கு விதித்திருக்கும் தடை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
காந்தியைப் பற்றி ஜோசப் லெலிவெல்ட் எழுதியுள்ள புத்தகத்தில் இதுவரை காந்தியைப் பற்றி எவரும் எழுதாத செய்திகளா இடம் பெற்றுள்ளது? என்பதுதான் பிரச்சனை.
காந்தியின் வாழ்க்கையை திறந்த புத்தகமாக பொதுமக்களின் பார்வைக்கு நூலாக எழுதி வெளியிட்டவர் வேறு எவருமல்ல அதே காந்தியடிகள்தாம். ஆம்! ‘சத்திய சோதனை’ என்ற நூலில் சாதாரணமாக காந்தியைப் போல ஒரு நபர் ஒருபோதும் வெளிப்படுத்தாத தகவல்களை அவர் வெளிப்படையாகவே அந்நூலில் எழுதியுள்ளார். அத்தகையதொரு நேர்மையும், துணிச்சலும்தான் காந்தியை உயர்ந்தவராக கருதச் செய்கின்றன.
அவரைக் குறித்து ஜோசப் லெலிவெல்ட் புதியதாக எதனையும் தனது நூலில் குறிப்பிடவில்லை எனலாம். காந்தியடிகளே கூறுவதுபோல், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான வீழ்ச்சிகளை உடையவராகவே அவர் திகழ்ந்தார். ஒரு அரசியல் விடுதலையாளர், சீர்திருத்தவாதி, அகிம்சையில் உறுதிப்பூண்ட தலைவர் என்பதை தவிர காந்தியை முஹம்மது  நபி மற்றும் இயேசுவின் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வின் பரிசுத்தத் தன்மையுடன் ஒப்பீடுச் செய்வதுதான் குழப்பங்களுக்கு காரணம்.
காந்தி என்ற மனிதரை பற்றி ஆழமாக தெரிந்துக்கொள்ள உதவும் நூல்களை தடைச்செய்ய முயல்வதையும்,விவாதங்களை கிளப்பி விடுவதையும் நிறுத்திவிட்டு அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட வீழ்ச்சிகளையும், எழுச்சிகளையும் எதிர்கால தலைமுறைகளுக்கு அறிமுகப்படுத்துவதுதான் உத்தமமான செயலாகும்.
காந்தியின் உருவம் நிலைப்பெற்றிருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் அவரை படுகொலைச் செய்த குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்ற வீரசாவர்க்கரின் உருவத்தை திறந்து வைத்து இழிவுப்படுத்தியதை விடவா ஜோசப் லெலிவெல்ட் காந்தியை அவமதித்துவிட்டார்?
அ.செய்யது அலீ

கர்நாடகா – சங்க்பரிவாரின் ராம ராஜ்யமா?

saffron1
எண்பதுகளின் இறுதியில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட மறைந்த முன்னாள் பிரதமரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ராஜீவ் காந்தி சந்தித்த கடுமையான சோதனைகளில் ஒன்று கர்நாடகா மாநிலத்தில் வருடந்தோறும் புதிய முதல்வர்களை நியமித்ததுதான்.
ராஜீவ் காந்தியின் அகால மரணத்திற்கு பின்னர் தலைவனில்லாத இயக்கமாக மாறிய காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக கர்நாடகா காங்கிரஸ் கட்சியினர் விளங்கினர். காங்கிரஸின் உருக்கு கோட்டையாக இருந்த கர்நாடக மாநிலத்தில் 1991-ல் அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியை கைப்பற்றிய பொழுது முதல்வராக பதவியேற்ற வீரெந்திர பாட்டீலின் பதவிக்கு ஒரு ஆண்டு ஆயுள் கூட முழுமையாக இல்லை.
உள்கட்சிப் போர் ஒருபுறம் ஜாதீய சக்திகளின் ஆதிக்கம் மறுபுறம் இந்நிலையில் எஸ்.பங்காரப்பா கர்நாடகா மாநில முதல்வராக பொறுப்பேற்றார். ஆனாலும், காங்கிரஸ் தனது வழக்கமான குணத்தை கைவிடவில்லை. பங்காரப்பாவின் ஆட்சி ஒரு ஆண்டை நிறைவுச்செய்யும் முன்பே உள்கட்சிப் பூசலினால் மீண்டும் அதிகாரப்போட்டி தலைதூக்கியது.
எம்.எல்.ஏக்களை டெல்லியில் காங்கிரஸ் உயர்மட்டக் குழுவின் முன்னால் ஆஜர்படுத்தி, முதல்வர் மீதான நம்பிக்கையின்மையை பகிரங்கமாக வெளிப்படுத்துதல் என காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிப் போர் கலாச்சாரத்தின் காரணமாக டெல்லிக்கும் கர்நாடகாவுக்குமிடையே அடிக்கடி பயணம் மேற்கொண்ட பங்காரப்பா 1992 நவம்பரில் தனது முதல்வர் பதவியையும் இழக்க நேர்ந்தது. அடுத்து வீரப்ப மொய்லி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். தமக்கு முன்னால் பதவியிலிருந்தவர்களின் வழிமுறையைத்தான் வீரப்பமொய்லியும் பின்பற்றினார்.
ஊழல்கள் மலிந்த சூழலில் மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த கர்நாடகா மக்கள் விரும்பவில்லை. மாநில ஆட்சிக்கு எதிரான உணர்வு, பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதை வேடிக்கை பார்த்த மத்தியில் ஆண்ட நரசிம்மராவ் ஆட்சி என காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசியதன் விளைவு அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தேவகவுடா தலைமையிலான ஜனதாதளம் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸிற்கு அத்தேர்தலில் பலத்த அடி கிடைத்தது.
1994 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளுக்கு மக்கள் ஆதரவளித்ததன் விளைவு தெலுங்குதேசம் மற்றும் இடதுசாரிகளின் மதசார்பற்ற கூட்டணி ஆட்சியில் அமர்வதற்கான வாய்ப்பு உருவானபொழுது பிரதமர் பதவிக்கு இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவகவுடா ஆவார். இவ்வாறு தேவகவுடா டெல்லிக்கு சென்றார். ஆனால் சீதாராம் யெச்சூரியினால் தேவகவுடா 10 மாதங்கள் கூட முழுமையாக பிரதமர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க இயலவில்லை.
தேவகவுடாவுக்கு பதிலாக கர்நாடகாவின் முதல்வர் பதவியை ஏற்ற ஜெ.ஹெச்.பாட்டீலோ நல்ல முதல்வர் என்ற பெயரை எடுக்க தவறிவிட்டார். விளைவு, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் அரியணை ஏறியது. எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வரானார்.
இதற்கிடையே உள்கட்சிப் பூசல்கள் மற்றும் ஊழல் ஆட்சிகளுக்கிடையே பாஜக வேகமாக வளர்ந்துக் கொண்டிருந்தது. வலுவான சிறுபான்மை மக்களின் ஆதிக்கம் இல்லாத கர்நாடகாவில் சங்க்பரிவாரத்தின் மதவெறி அஜண்டாக்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கத் துவங்கியது.
தென்னிந்தியாவில் காவியின் ஆட்சி என்ற சங்க்பரிவாரத்தின் கனவை நினைவாக்கும் விதமாக அவர்களுக்கு ஆதரவான களத்தை உருவாகும் சூழலை காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதாதளமும் ஏற்படுத்திக் கொடுத்தன.
கிராம மக்களை மறந்துவிட்டு நகரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதலாளித்துவ சக்திகளின் விருப்பங்களுக்கு துணை நின்று, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வழியில் பயணித்தார் எஸ்.எம்.கிருஷ்ணா.
கிராம மக்களின் பிரச்சனைகளை கண்டும் காணாததுபோல் நடித்த எஸ்.எம்.கிருஷ்ணா, உலக ஐ.டி வரைப்படத்தில் பெங்களூரின் இடத்தை உறுதிச் செய்வதிலேயே குறியாக இருந்தார்.
ஐந்துவருடம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அடுத்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது. மதசார்பற்ற ஜனதாதளத்தின் குமாரசாமி பாரதீய ஜனதா ஆதரவுடன் கர்நாடகாவின் 18-வது முதல்வராக பதவியேற்றார். இது பா.ஜ.கவின் அதிகாரத்தை நோக்கி எடுத்துவைத்த காலடிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஒரு ஆண்டிற்கு பிறகு குமாரசாமி முதல்வர் பதவியை இழக்க கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரும்பான்மைக் கிடைக்க 4 சீட்டுகள் குறைவான நிலையில் ஆட்சியில் அமர்ந்தது பா.ஜ.க.பின்னர் கர்நாடகத்தில் பா.ஜ.கவின் ஆட்சி ஊழலிலும், குதிரை வியாபாரத்திலும் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளியது.
ஹிந்துத்துவத்தின் உயிர்தெழலுக்காக கடுமையாக உழைக்கும் சங்க்பரிவாரின் உண்மையான விருப்பம்தான் கர்நாடகாவில் தற்பொழுது நடந்துவரும் பகல் கொள்ளையாகும். பெல்லாரியின் ராஜாக்களாக வலம்வரும் ரெட்டி சகோதரர்கள்தான் ஊழலின் சூத்திரதாரிகள்.

ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு மெட்ரிக் டன் இரும்பை விற்று அதில் 25 ரூபாயை வரியாக செலுத்துகிறார்களாம். பெல்லாரியின் மலைகளையெல்லாம் ரெட்டி சகோதரர்கள் தரைமட்டமாக்கி வருகின்றனர். கிடைப்பதில் ஒரு பங்கு டெல்லியில் பா.ஜ.க தலைவர்களின் சட்டைப் பையில் முறைதவறாமல் விழுந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த பட்டப்பகல் கொள்ளையை ஆசிர்வதித்தவாறு கர்நாடகா ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.சி.ஜெயதேவும் எடியூரப்பாவுக்கு உறுதுணையாக உள்ளார்.
அதிகாரத்தை காப்பாற்றுவதற்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆட்சி ரிஸார்ட்டுகளுக்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குமிடையே சீரழிந்துக் கொண்டிருந்தது.

அதிகாரம்-அது மட்டுமே எடியூரப்பாவிற்கும், அவரது கூட்டாளிகளுக்கும் ஒரே லட்சியம். மூன்று வருடங்களுக்கு முன்பு எடியூரப்பா காங்கிரஸில் சேர்வதற்கு முயற்சி மேற்கொண்ட பொழுது ஜெயதேவ் தலையிட்டு தடுத்து நிறுத்தினார். அதேவேளையில் ஹிந்துத்துவாவின் மதவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஊழல் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
ஆட்சியில் தனது செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்துக்கொண்டு பிரமோத் முத்தலிக்கின் ஸ்ரீராம சேனா ஒரு கலவரத்திற்கு பத்துலட்சம், இரண்டு கலவரத்திற்கு பணம் கட்டினால் ஒரு கலவரம் இலவசம் என்ற மூலதன சந்தையின் ஆஃபருடன் செயல்படத் துவங்கியது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தியதைக் கூட எடியூரப்பாவின் பாஜக அரசால் பொறுத்துக் கொள்ளவியலவில்லை. இதற்காக அவர்கள் நிழலுக தாதாக்களுடன் கூட்டணி வைக்கக்கூட தயங்கவில்லை. நவ்ஷாத் ஹாஸிம்ஜி ஒரு அரசு-நிழலுக தாதாக்கள் கூட்டணியின் கொடூரத்திற்கு தனது இன்னுயிரை பறிக்கொடுத்தார்.
மைசூரில் ஹலீமா ஸாதிய்யா மஸ்ஜிதில் சங்க்பரிவாரக் கும்பல் பன்றியின் இறைச்சியை எறிந்து முஸ்லிம் சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்த முனைந்தது. ஆனால், இதனைப் புரிந்துக் கொண்ட முஸ்லிம் அமைப்புகள் ஒரு கலவரத்தை திட்டமிட்ட சங்க்பரிவார ஆட்சியாளர்களின் முயற்சிகளை எதிர்த்தனர்.
ஆனால், கலவரத்தை கொளுந்துவிட்டு எரியச் செய்யலாம் எனக் கருதிய ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்த கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யாவின் முயற்சி தோல்வியடைந்ததால், அவரது கவனம் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சிறையில் அடைப்பதை நோக்கி திரும்பியது.
பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்களை கலவரத்தை தூண்ட முயன்றதாகக் கூறி கைதுச் செய்த ஆச்சார்யா, இதற்கெதிராக ஜனநாயகரீதியில் போராடிய பெண்கள் உள்ளிட்டவர்களை காவல்துறையின் மூலம் வீதியில் போட்டு கண்மூடித்தனமாக அடித்து உதைக்கச் செய்தார். இறுதியில் சட்டத்திற்கு புறம்பாக பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றமே தலையிட நேர்ந்தது.
தொடர்ந்து எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்பவும், மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தவும் ஒரு தீவிரவாதியை உருவாக்கும் நிலைமைக்கு கர்நாடக பா.ஜ.க அரசு தள்ளப்பட்டது.
பலிகடாவை கண்டுபிடிக்கும் முயற்சி கடைசியாக கர்நாடகா எல்லையும் தாண்டி கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் சென்று முடிந்தது. ஊனமுற்றவராக ஒன்பது ஆண்டுகளை கோவைக் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டு பின்பு விடுதலையான அப்துல் நாஸர் மஃதனியை பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கிலும் கேரள அரசின் உதவியுடன் கைதுச்செய்து சிறையிலடைத்தது கர்நாடகா பா.ஜ.க அரசு.
வழக்கத்திற்கு மாறாக அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிரான முயற்சிகளைக் குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன. மஃதனிக்கெதிரான சாட்சிகளும், வாக்குமூலங்களும் போலி என பல பக்கங்களிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கர்நாடகா மாநிலம் குடகு என்ற இடத்தில் நடந்த ரகசிய முகாமில் மஃதனி கலந்துக் கொண்டார் என்பதுதான் கர்நாடகா அரசு மஃதனிக்கு எதிராக முன்வைத்த முக்கிய சாட்சி .
கேரள போலீசாரின் கண்காணிப்பிலிருந்த அப்துல் நாஸர் மஃதனி அவர்களின் அனுமதியில்லாமல் எங்கும் செல்வதற்கான சுதந்திரத்தையும் இழந்திருந்தார். கேரள போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அப்துல் நாஸர் மஃதனி தனது ஒற்றைக் காலுடன் கர்நாடகா மாநிலம் குடகு ரகசிய முகாமில் பங்கேற்றார் என கர்நாடகா அரசு கூறியது.
பிரபலமானவர் என்ற நிலையில் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அப்துல் நாஸர் மஃதனியின் உருவம் அடிக்கடி தென்படுவதால் அவரை குடகில் வைத்து அடையாளம் கண்டதாக கூறி சாட்சி வாக்குமூலம் அளித்ததாக கர்நாடகா போலீஸ் தெரிவித்தது.
இதன் உண்மை நிலையை அறிவதற்காக ஏசியாநெட்டின் முன்னாள் செய்தியாளரான ஷாஹினா டெஹல்காவிற்காக கர்நாடகா அரசு மஃதனிக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறும் சாட்சிகளை சந்தித்துள்ளார். சாட்சிகளில் ஒருவர் பா.ஜ.கவைச் சார்ந்த யோகானாந்த் என்பவராவார். பா.ஜ.க அரசு அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சிகளாக முன்னிறுத்தியவர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதுக்கூட தனக்கு தெரியாது என யோகானந்த் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, குடகில் நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்த வாக்குமூலங்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என யோகானந்த் கூறியுள்ளார்.
உண்மை விபரங்கள் வெளிவந்தால் தங்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுவிடும் என அஞ்சிய பா.ஜ.க அரசு ஷாஹினாவுக்கெதிராக நடவடிக்கையை மேற்கொண்டது.
சமீபத்தில் கேரளாவிலிருந்து தாய்லாந்திற்கு வர்த்தகம் தொடர்பாக பயணித்துவிட்டு திரும்பி வருகையில் பெங்களூர் வழியாக பயணித்த கேரளாவைச் சார்ந்த 9 நபர்களை அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் தனியாக கடுமையான சோதனைகளை மேற்கொண்டது பா.ஜ.க அரசு.
இவ்வாறு நாடு எக்கேடுக் கெட்டு குட்டிச்சுவாரானால் எங்களுக்கு என்ன? எங்கள் நோக்கம் நிறைவேறினால் போதும் என்ற மனோநிலையிலிருக்கும் கர்நாடகாவின் சங்க்பரிவார அரசுக்கு இனி குஜராத் மாதிரி இனப்படுகொலைதான் மீதமுள்ளதோ?
விமர்சகன்