Saturday, April 16, 2011

காந்தியை இழிவுப்படுத்தியது யார்?

gandi savarkar
அமெரிக்க எழுத்தாளர்,ஜோசப் லெலிவெல்ட் எழுதிய, “கிரேட் ஸோல், மகாத்மா காந்தி அண்ட் ஹிஸ் ஸ்ட்ரக்ல் வித் இண்டியா” (Great Soul- Mahatma Gandhi and His Struggle with India) என்ற புதிய வாழ்க்கை சரிதப் புத்தகம், இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் தேசத் தந்தை என்று கருதப்படும் காந்தியை ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் இனவெறியர் என்று காட்டும் வகையில் சில கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக,சில பத்திரிகைகளில் வெளிவந்த மதிப்புரைகள் இந்த சர்ச்சையைத் தூண்டியிருக்கின்றன.
காந்திக்கும்,ஜெர்மானிய கட்டிடக் கலைஞரும், உடற்பயிற்சி செய்வதில் விருப்பம் உள்ளவருமான ஒருவருக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவை இந்த புத்தகத்தின் சில பகுதிகள் கோடிட்டுக் காட்டியிருந்தன. குஜராத் அரசு இப்புத்தகத்தை தடைச் செய்துள்ளது. மத்திய சட்ட அமைச்சர் இப்புத்தகத்தை தடைச்செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.
பின்னர் இப்புத்தகத்தை எழுதிய நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், புலிட்சர் விருது பெற்றவருமான, ஜோசப் லெலிவெல்ட், காந்தியை, இருபால் உறவுக்காரர் என்றோ அல்லது இனவெறியர் என்றோ தான் எந்த இடத்திலும் வர்ணிக்கவில்லை எனத் தெரிவித்ததால் புத்தகத்தை தடைச்செய்ய போவதில்லை என கூறியுள்ளார்.
ஆனால்,புத்தகத்திற்கு தடை விதித்தாலும் கூட இணையதளங்கள் வாயிலாகவும் இன்னும் பிற வழிகளிலும் பல மக்களையும் அது சென்றடையத்தான் செய்யும். இத்தகைய விவாதங்கள் அமெரிக்க யூதரான ஜோசப் லெலிவெல்ட் எழுதிய புத்தகத்திற்கு விளம்பரத்தையே தேடிக் கொடுக்கும் என்பதை தவிர வேறு எதுவும் சம்பவிக்கப் போவதில்லை.
குஜராத் மாநிலத்தை ஆளும் மோடி ஹிந்துத்த்வா பாசிச பரிவார பாசறையில் பயிற்சி பெற்றவர். ஹிந்துத்துவா பாசிஸ்டுகள்தாம் காந்தியை திட்டம் தீட்டி படுகொலைச் செய்தனர். அத்தோடு காந்தியின் அகிம்சைக் கொள்கைக்கு எதிராக நாடுமுழுவதும் கலவரங்கள், இனப் படுகொலைகள், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி இந்தியாவை இம்சைப்படுத்தி வருபவர்கள்தாம் இந்த கயவர்கள் கூட்டம்.
இந்நிலையில் தேசபிதாவின் மீது ஏதோ பற்றுடையவர்போல் கபட நாடகமாடும் மோடியின் அரசியல் சந்தர்ப்பவாதம்தான் காந்தி பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகத்திற்கு விதித்திருக்கும் தடை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
காந்தியைப் பற்றி ஜோசப் லெலிவெல்ட் எழுதியுள்ள புத்தகத்தில் இதுவரை காந்தியைப் பற்றி எவரும் எழுதாத செய்திகளா இடம் பெற்றுள்ளது? என்பதுதான் பிரச்சனை.
காந்தியின் வாழ்க்கையை திறந்த புத்தகமாக பொதுமக்களின் பார்வைக்கு நூலாக எழுதி வெளியிட்டவர் வேறு எவருமல்ல அதே காந்தியடிகள்தாம். ஆம்! ‘சத்திய சோதனை’ என்ற நூலில் சாதாரணமாக காந்தியைப் போல ஒரு நபர் ஒருபோதும் வெளிப்படுத்தாத தகவல்களை அவர் வெளிப்படையாகவே அந்நூலில் எழுதியுள்ளார். அத்தகையதொரு நேர்மையும், துணிச்சலும்தான் காந்தியை உயர்ந்தவராக கருதச் செய்கின்றன.
அவரைக் குறித்து ஜோசப் லெலிவெல்ட் புதியதாக எதனையும் தனது நூலில் குறிப்பிடவில்லை எனலாம். காந்தியடிகளே கூறுவதுபோல், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான வீழ்ச்சிகளை உடையவராகவே அவர் திகழ்ந்தார். ஒரு அரசியல் விடுதலையாளர், சீர்திருத்தவாதி, அகிம்சையில் உறுதிப்பூண்ட தலைவர் என்பதை தவிர காந்தியை முஹம்மது  நபி மற்றும் இயேசுவின் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வின் பரிசுத்தத் தன்மையுடன் ஒப்பீடுச் செய்வதுதான் குழப்பங்களுக்கு காரணம்.
காந்தி என்ற மனிதரை பற்றி ஆழமாக தெரிந்துக்கொள்ள உதவும் நூல்களை தடைச்செய்ய முயல்வதையும்,விவாதங்களை கிளப்பி விடுவதையும் நிறுத்திவிட்டு அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட வீழ்ச்சிகளையும், எழுச்சிகளையும் எதிர்கால தலைமுறைகளுக்கு அறிமுகப்படுத்துவதுதான் உத்தமமான செயலாகும்.
காந்தியின் உருவம் நிலைப்பெற்றிருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் அவரை படுகொலைச் செய்த குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்ற வீரசாவர்க்கரின் உருவத்தை திறந்து வைத்து இழிவுப்படுத்தியதை விடவா ஜோசப் லெலிவெல்ட் காந்தியை அவமதித்துவிட்டார்?
அ.செய்யது அலீ

No comments:

Post a Comment